முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான போர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானின் டெஹ்ரான் நகர் மீது சரமாரியான குண்டுவீச்சை நடத்துகின்றன. மார்ச் 4, 2026.

அமெரிக்காவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் ஒன்றான கொலராடோவின் கிரீலியில் (Greeley) உள்ள JBS ஆலையில், சுமார் 3,800 இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் திங்களிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வறுமைக்கு இணையான மிகக்குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழலை எதிர்த்து, கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பில் 99 சதவீத தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மினசோட்டாவின் ஆஸ்டின் நகரில் 1985-86 ஆண்டுகளில் நடந்த கசப்பான ஹோர்மல் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்க இறைச்சி பதப்படுத்தும் துறையில் நடக்கும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் இதுவாகும்.

கிரீலி தொழிலாளர்களில் பலர் ஹைட்டி (Haiti) மற்றும் சோமாலியாவிலிருந்து சமீபத்தில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் நாடுகடத்தல் அச்சுறுத்தலுக்கு நேரடியாக ஆளாகியுள்ளனர். இருப்பினும், அந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்துள்ளனர். கிரீலி தொழிலாளர்களின் இந்தத் துணிச்சலும் உறுதியும், அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் வெடிப்புத்தன்மை கொண்ட நிலையைப் பிரதிபலிக்கின்றன.

இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு போரின் பின்னணியில் தொடங்குகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கின. இது தற்போது ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய மோதலாக வேகமாக மாறிவருகிறது.

இந்தப் போருக்கான காரணங்களில் பல சிக்கலானவையாகும். மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காகப் பல தசாப்தங்களாகப் பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால இலக்காக ஈரான் இருந்து வருகிறது. படுகொலைகள் மற்றும் பாரிய இனப்படுகொலைகள் மூலம் ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வது என்பது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுடனும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான உந்துதலுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு முக்கிய காரணி அமெரிக்காவிற்குள் நிலவும் சமூக நெருக்கடியாகும். வரலாறு நெடுகிலும், ஆழமான உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆட்சிகள் அவற்றைத் தீர்ப்பதற்குப் போரையே ஒரு வழிமுறையாக நாடுகின்றன. மெக்கின்லி நிர்வாகம், கடுமையான வர்க்க மோதல்கள் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் 1898-ஆம் ஆண்டு ஸ்பானிய-அமெரிக்கப் போரைத் தொடங்கியது. ஜார் காலத்து ரஷ்யாவின் உள்நாட்டு மந்திரியான ப்ளெவ், “புரட்சியின் அலையைத் தடுத்து நிறுத்த இந்த நாட்டிற்குத் தேவைப்படுவது ஒரு குறுகிய, வெற்றிகரமான போர்” என்று கூறியதோடு, 1904-ல் ஜப்பானுடன் போர் செய்வதைப் பரிந்துரை செய்தார்—ஆனால் அந்தக் கணக்கீடு 1905-ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் அதற்குரிய தகுந்த பதிலைப் பெற்றது.

இருப்பினும், இந்த போக்கின் மிகவும் பேரழிவுகரமான வெளிப்பாடுகள் இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்குச் சொந்தமானவை. 1914-ல் ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள், எழுச்சி பெற்று வந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்களை தேசியவாத நாட்டுப்பற்று எனும் வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கான ஒரு கருவியாகவே போரை நோக்கின. ஆனால், அந்தப் போரே 1917-ன் ரஷ்யப் புரட்சிக்கும், ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட புரட்சிகர எழுச்சிகளுக்கும் வழிவகுத்தது. இரண்டாம் உலகப் போரைப் பொறுத்தவரை, ஹிட்லரின் இடைவிடாத இராணுவமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தினாலும், வரலாற்றாசிரியர் டிம் மேசன் குறிப்பிட்டுள்ளபடி, உள்நாட்டில் நிலவிய “வீழ்ச்சி மற்றும் குழப்பத்தைத்” தவிர்ப்பதற்கான முயற்சியினாலும் தூண்டப்பட்டன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இதேபோன்ற அழுத்தங்களையே பிரதிபலிக்கின்றன. 2026-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆதிக்கம் செலுத்திய சிக்கல்களைக் கவனியுங்கள். கடந்த ஆண்டு நடந்த பிரம்மாண்டமான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அமெரிக்கா ஒரு சமூகப் போராட்ட அலையினால் உலுக்கப்பட்டது. மினியாபோலிஸ்-செயின்ட் போல் நகரங்களுக்குள் சுமார் 3,000ம் மத்திய அரசின் குடியேற்ற முகவர்கள் குவிக்கப்பட்டதே இதற்கான தூண்டுதலாக அமைந்தது; இதன் உச்சகட்டமாக ஜனவரி 7-ஆம் தேதி ரெனீ நிக்கோல் குட் என்பவர் ஒரு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனவரி 23 அன்று, மினியாபோலிஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் -30°F கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் அணிவகுத்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள் அதிகரித்து வந்தன, இவை தொழிற்சங்க அமைப்புகளிடமிருந்தோ அல்லது ஜனநாயகக் கட்சியிடமிருந்தோ வரவில்லை, மாறாக சாமானிய மக்களிடமிருந்தே உருவானது.

ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் கெஸ்டாப்போ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) போன்ற ICE மற்றும் CBP முகவர்களின் தாக்குதலில், அலெக்ஸ் பிரெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் பரவியதுடன், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒரு தேசிய அளவிலான வகுப்புப் புறக்கணிப்பு அலையும் உருவானது. ஒரு கணக்கீட்டின்படி, 2026-ஆம் ஆண்டில் மட்டும் 48 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா முழுவதிலும் உள்ள 236 பள்ளி மாவட்டங்களில் 334 வகுப்புப் புறக்கணிப்புகள் நடந்துள்ளன.

அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் உருவாகி வந்த வேலைநிறுத்த இயக்கத்தை தடுத்து நிறுத்த, தொழிற்சங்க எந்திரங்கள் தீவிரமாக முயற்சித்தன. நியூ யோர்க் நகரில் 15,000 செவிலியர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 26 அன்று, கலிபோர்னியா மற்றும் ஹவாயில் உள்ள கெய்சர் பெர்மனென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 31,000ம் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்தனர். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய சுகாதாரத் துறை வேலைநிறுத்தங்களில் ஒன்றாகும். பிப்ரவரி 9 அன்று, 6,400 சான் பிரான்சிஸ்கோ ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பள்ளிகளுக்கான போதிய நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.

சமூகப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பு என்பது, பல தசாப்தங்களாக நிலவி வரும் பாரிய சமூக சமத்துவமின்மை மற்றும் தன்னலக்குழுவின் கைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வம் குவிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்டதாகும். ஆளும் வர்க்கமானது வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் அழித்து வரும் அதே வேளையில், தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைவதையும், அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அமெரிக்கா தற்போது சமாளிக்க முடியாத அளவிலான பொது மற்றும் தனியார் கடன் விரிவாக்கம், டாலரின் உலகளாவிய இருப்பு நாணய அந்தஸ்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் ஊதியங்களை விழுங்கி வரும் மீண்டும் தலைதூக்கியுள்ள பணவீக்க அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு நபரால் வழிநடத்தப்படும் ட்ரம்ப் நிர்வாகத்தை, மக்கள் தொகையின் வளர்ந்து வரும் பெரும் பிரிவினர் வெறுக்கின்றனர். ஜனவரி மாத இறுதியில் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக்கணிப்பில், ட்ரம்ப்பின் ஆதரவு வெறும் 37 சதவீதமாக மட்டுமே இருந்தது; 50 சதவீத அமெரிக்கர்கள் இந்த நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ட்ரம்ப் இப்போது முழுவதுமாக ஒரு வருடத்தை எதிர்மறையான நிகர ஆதரவு மதிப்பீட்டுடன் கழித்துள்ளார்.

ஜெப்ரி எப்பஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டிருப்பது, ட்ரம்ப்பின் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேட்டிற்கு மேலதிக ஆதாரங்களை வழங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அழுகிப்போன தார்மீகத்தையும், இரு கட்சிகளிலும் உள்ள அவர்களின் அரசியல் பிரதிநிதிகளின் முகத்திரையையும் கிழித்துள்ளது. இந்தப் போர் மூலம் மக்களின் “கவனத்தைத் திசைதிருப்ப” முயற்சிப்பதன் வாயிலாக, ட்ரம்ப் முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஒரு கருவியாகவே செயல்படுகிறார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் குற்றங்களில் ஜனநாயகக் கட்சியினருக்கும் ஆழமான பங்கு உண்டு. அவர்கள் வெறும் போலி எதிர்க்கட்சியே ஆவர். ஈரான் மீதான போரையும் அதன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதையும் அவர்களும் ஆதரிக்கின்றனர். போருக்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்தபோது, பாரிய இராணுவச் செலவின மசோதாக்களை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் உதவினர். மேலும், ICE முகவர்களின் ஒடுக்குமுறை மற்றும் அரசியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தபோது, ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் ட்ரம்ப்புடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டினர்.

ஜனநாயகக் கட்சியினரின் இந்த ஒத்துழைப்பு வெறியில் நியூ யோர்க் நகர மேயரும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் உறுப்பினருமான சோஹ்ரான் மம்தானியும் அடங்குவார். போர் தொடங்குவதற்கு முந்தைய மாதங்களில் அவர் ட்ரம்ப்பை இரண்டு முறை சந்தித்தார். அதில் ஒரு சந்திப்பு குண்டுவீச்சு தொடங்குவதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

ட்ரம்ப் விஷயத்தைத் திசைதிருப்ப விரும்புகிறார். ஊடகங்கள் கவனத்தைத் திசைதிருப்ப விரும்புகின்றன. ஜனநாயகக் கட்சியினரும் கவனத்தைத் திசைதிருப்பவே விரும்புகிறார்கள். ஆனால், போர் உள்நாட்டு நெருக்கடிகளைக் குறைப்பதற்குப் பதிலாக, அவற்றைத் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஈரான் மீதான போர் அதன் தொடக்கத்திலிருந்தே மக்களிடையே பெரும் ஆதரவின்மையைப் பெற்றுள்ளது. எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார விளைவுகள் உடனடியாவும் கடுமையானதாகவும் உள்ளன. மோதலின் முதல் ஆறு நாட்களில் மட்டும் செலவிடப்பட்ட 11.3 பில்லியன் டாலர்கள் என்பது சமூக வளங்களின் பாரிய திசைதிருப்பலாகும். இதற்கான விலை சமூக நலத்திட்டங்கள் மீதான தாக்குதலின் மூலமே செலுத்தப்படும். போர் விரிவடைந்து, பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போது எதிர்ப்பும் மேலும் வளரும்.

2003-ஆம் ஆண்டு ஈராக் போர் தொடங்கியபோது, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இவ்வாறு எழுதியது:

தொடங்கியுள்ள இந்த மோதலின் ஆரம்பக் கட்டங்களின் முடிவு எதுவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது. அதனால் உலகத்தை வெல்ல முடியாது. மத்திய கிழக்கின் மக்கள் மீது மீண்டும் காலனித்துவ விலங்குகளைப் பூட்ட முடியாது. போரின் மூலம் தனது உள்நாட்டுப் பிணிகளுக்கு அது ஒரு நிலையான தீர்வை ஒருபோதும் காண முடியாது. மாறாக, போரினால் உருவாகும் எதிர்பாராத சிக்கல்களும் பெருகிவரும் எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் அனைத்து உள்நாட்டு முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தும்.

இந்த வரிகள் எழுதப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அமெரிக்க சமூகத்தின் “உள்நாட்டு நோய்கள்” தற்போது உடல் முழுவதும் பரவிய புற்றுநோயாக மாறியுள்ளன. வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு குண்டரான ட்ரம்ப், இந்த யதார்த்தத்தின் விளைவும் அதன் உருவகமுமே ஆவார். ஈரான் மீதான போரானது, அதன் அனைத்து கொடூரமான குற்றத்தன்மையுடனும், அதை முன்னெடுக்கும் அரசாங்கமும் சேர்ந்து, ஒரு முதலாளித்துவ தன்னலக்குழு பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையும், ஒரு சமூக ஒழுங்குமுறை அதன் அனைத்து அரசியல் அங்கீகாரத்தையும் இழந்து வருவதையும் வெளிப்படுத்துகின்றன.

நெருக்கடியின் அளவானது அரசாங்கத்தின் பெருகிவரும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. மினியாபோலிஸில் அமெரிக்கக் குடிமக்கள் கொல்லப்பட்டதன் மூலம் வெளிப்பட்ட சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டம் இப்போதும் தொடர்கிறது. ஈரானில், “எதுவும் மேசையிலிருந்து விலக்கப்படவில்லை” என்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது—உலகிலேயே மிகப்பெரிய அணு ஆயுதக் குதங்களைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்திடமிருந்து வரும் இத்தகைய வார்த்தையை அதன் நேரடிப் பொருளிலேயே (அதாவது, அணு ஆயுதத் தாக்குதல் சாத்தியம் என) எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், போர் மற்றும் சர்வாதிகாரத்தை உருவாக்கும் அதே முரண்பாடுகள் வர்க்கப் போராட்டத்தையும் தீவிரப்படுத்துகின்றன. 2026-ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் வெடித்த போராட்டங்களின் உள்ளடக்கத்தைப் போர் மாற்றிவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு இன்னும் அதிக அவசரத் தன்மையைக் கொடுத்துள்ளது. கொலராடோவின் கிரீலியில் உள்ள JBS ஆலையில் இப்போது தொடங்கியுள்ள வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு ஆழமடைந்து விரிவடைந்து வருவதற்கான ஒரு வலுவான அறிகுறியாகும்.

தற்போது தேவையானது என்னவென்றால், ஊதியம், சுரண்டல் மற்றும் சமத்துவமின்மை தொடர்பான போராட்டங்களை—ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல், சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போராட்டம் மற்றும் பேரழிவை நோக்கித் தீவிரமடைந்து வரும் போருக்கான எதிர்ப்பு ஆகியவற்றுடன் ஒன்றிணைப்பதே ஆகும்.

இதை ஜனநாயகக் கட்சி, பெருநிறுவன ஊடகங்கள் அல்லது தொழிற்சங்க அமைப்புகளின் மூலமாகச் செய்ய முடியாது. ஏனெனில் இந்த அமைப்புகள் திட்டமிட்ட முறையில் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தவும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், தொழிலாளர்களை அரசு மற்றும் பெருநிறுவனங்களின் தேவைகளுக்கு அடிபணிய வைக்கவுமே உழைக்கின்றன. இதற்கு அதிகாரத்துவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு பணியிடத்திலும், தொழில்துறையிலும், பிராந்தியங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து இணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த சுயாதீனமான சக்தியை ஒழுங்கமைப்பதற்கான வழியாக, தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) விரிவுபடுத்துமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அறைகூவல் விடுக்கிறது. போருக்கு எதிரான போராட்டத்தை , அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. இதற்கான மாற்று என்பது ஒன்றில் காட்டுமிராண்டித்தனம் —போர், ஒடுக்குமுறை மற்றும் சமூக அழிவு— அல்லது சோசலிசம். அதாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், போர் இயந்திரத்தை அழிப்பதற்கும், தன்னலக் குழுக்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பொருளாதார வாழ்வைத் தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் மனிதத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading