மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் கடந்து செல்லும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையைப் பற்றி —உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான நீர்வழி, போர் தொடங்கியதிலிருந்து ஈரான் திறம்பட மூடியிருக்கிறது— ஹெக்செத் செய்தியாளர்களிடம் குறிப்பிடுகையில், “இங்குள்ள ஒவ்வொரு விருப்பத்திற்கும் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. நாங்கள் பிற அரசு முகமைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்த நீரிணை தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருக்கவோ அல்லது வணிகப் பொருட்களின் போக்குவரத்து தடைபடுவதையோ நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை,” என்று கூறினார்.
இந்தக் குற்றவியல் போர் முழுவதும் ஹெக்செத்தின் நடத்தையை வகைப்படுத்திக்காட்டிய, அதே ஏளனமான போர் வெறியுடன் வழங்கப்பட்ட இந்த அறிக்கையை, ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பொருள் ஒன்றுதான்: ட்ரம்ப் நிர்வாகம் போரின் அடுத்த மற்றும் மிக மோசமான கட்டத்திற்குத் தயாராகி வருகிறது —அதாவது ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய ஈரான் நிலப்பகுதியைக் கைப்பற்றுவதுக்கு அமெரிக்கத் தரைப் படைகளை அனுப்பி ஒரு படையெடுப்பை நடத்த அது திட்டமிட்டுள்ளது என்பதாகும்.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரின் பொதுப் பேச்சுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான சொற்களின் ஊற்றாகவே ஹெக்செத்தின் அறிக்கை அமைந்தது. “எங்கள் எதிரிகளுக்கு இடமளிக்க மாட்டோம், கருணை காட்ட மாட்டோம்,” என்று அவர் ஒருமுறை மட்டுமல்ல, போருக்கான ஒரு முழக்கமாகவே மீண்டும் மீண்டும் அறிவித்தார். எதிரிகளை “மன்னிப்பு, தயக்கம் அல்லது இரக்கம் இன்றி” வேட்டையாடிக் கொல்வதாக அவர் சபதம் செய்தார். “போர் விதிகள் என்பது முட்டாள்தனமானது” என்று அவர் கேலி செய்ததோடு, ஐரோப்பியர்கள் “பதற்றமடைவதையும்” ஏளனம் செய்தார். அயதுல்லா கொமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் நியமிக்கப்பட்டு, தற்போது காயமடைந்துள்ள ஈரானின் உயர்மட்டத் தலைவர் பதுங்கு குழியில் “பதுங்கியிருப்பதாக” வர்ணித்த அவர், “எலிகள் அப்படித்தான் செய்யும்” என்றும் கூறினார். மேலும் “வானத்திலிருந்து நாள் முழுவதும் மரணத்தையும் அழிவையும்” கொடுப்போம் என்ற வாக்குறுதியையும் அவர் அளித்தார்.
இது நாசிசத்தின் மொழியாகும். இது வன்முறையில் பெருமை கொள்ளும், பலியாகப்போகும் மனிதர்களின் உயிர்களை மதிப்பற்றதாகக் கருதும், மேலும் மிகப் பெரிய அளவிலான குற்றங்களுக்குத் தனது மக்களைத் தயார்படுத்தும் ஒரு ஆட்சியின் மொழியாகும். “யுத்த அமைச்சர்” என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒருவர், போர் “இரக்கமின்றி” —சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், போர்க் குற்றங்களைத் தூண்டுவதாகக் கூறும் ஒரு சொற்றொடர்— நடத்தப்படுகிறது என்று வெளிப்படையாகப் பெருமை பீற்றிக் கொள்கிறார். மேலும் அவர், ஏற்கனவே என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் விவரிக்கவில்லை. வரவிருக்கும் விஷயங்களையும் அவர் சமிக்ஞை செய்கிறார்.
ஈரான் மீதான தரைவழி ஆக்கிரமிப்புதான் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. ஹெக்செத்தின் மிரட்டல்களில் மறைமுகமாகக் கூறப்பட்டிருப்பது, கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் தலையங்கத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது: “நீரிணையை மீண்டும் திறப்பதும், அதன் போக்குவரத்தின் மீதான ஈரானின் வீட்டோ (தடுப்பு) அதிகாரத்தைக் குறைப்பதும் இனி ஒரு இலக்காக இருக்க வேண்டும். ஒரு மோதல் உருவாகும்போது, போரின் நோக்கங்களும் மாற வேண்டும்.”
போரைத் தீவிரப்படுத்துவதன் பின்னணியிலுள்ள தர்க்கம்
இந்த வரவிருக்கும் குற்றமானது, இந்தச் சட்டவிரோதப் போரைத் தொடங்கியபோது ஏற்பட்ட தவறான கணக்கீடுகளின் பேரழிவுகரமான விளைவுகளிலிருந்து நேரடியாக எழுகிறது. “அதிவேக மற்றும் ஆக்ரோஷமான” இராணுவ நடவடிக்கை திட்டத்தின் வடிவமைப்பாளர்கள், உச்ச தலைவர் கொமேனியைக் கொல்வது, ஈரானின் வழக்கமான இராணுவத் திறன்களை வான்வழியாக அழிப்பது மற்றும் அரசாங்கத்தை “கைப்பற்றும்படி” மக்களை அழைப்பது ஆகியவை இஸ்லாமியக் குடியரசின் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பினர் — அல்லது நம்புவதாகக் காட்டிக்கொண்டனர். ஆட்சியின் தலைமையை அழிப்பது ஆட்சி மாற்றத்தை வழங்கும் என்றும், போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் அவர்கள் கருதினர்.
போர் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியும், ஈரானிய ஆட்சி வீழவில்லை. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) சரணடையவில்லை. ஈரான் எட்டு நாடுகள் முழுவதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் ஹோர்முஸ் நீரிணையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. எண்ணெய் விலை இப்போது ஒரு பேரலுக்கு 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் சந்தையின் வரலாற்றில் இது மிகப்பெரிய விநியோகத் தடை என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) கூறியதன் விளைவாக எரிவாயு மற்றும் உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்து வருகின்றன.
தன்னால் உருவாக்கப்பட்ட இந்தப் பேரழிவை எதிர்கொள்ளும் ட்ரம்ப் பின்வாங்கவில்லை. மாறாக அவர் போரைத் தீவிரப்படுத்துகிறார். அவர் “நிபந்தனையற்ற சரணடைதலுக்கு” கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தமக்கு இருப்பதாக அவர் உரிமை கோரியுள்ளார். இப்போது அவரது பாதுகாப்புத் துறைச் அமைச்சர், அந்த நீரிணை “தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்று அறிவிக்கிறார்—இது அமெரிக்க படையினர்களை ஈரானிய மண்ணில் கொல்லவும் சாகவும் அனுப்புவதற்கான ஒரு அதிகாரத்துவ நயவஞ்சகச் சொல்லாகும்.
ஈரானில் புதிய துருப்புக்களைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதன் மூலம் தரைவழிப் போருக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. விரிவடைந்து வரும் இந்தப் போரில் “பயன்பாட்டிற்கான வாய்ப்புகளை” வழங்குவதற்காகவும், கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்குத் தரைத் தளத்தைத் தயார் செய்வதற்காகவும், சுமார் 5,000ம் கூடுதல் கடற்படையினர்கள் மற்றும் மாலுமிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு எதைக் குறிக்கிறது?
தொழிலாளர்களும் இளைஞர்களும் என்ன தயார் செய்யப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தரைவழித் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கட்டுப்பாட்டுக்குள் முடிந்துவிடாது. அது நீண்டகாலம் நீடிக்கக்கூடிய மற்றும் கொடூரமான இரத்தக் களரியாகவே அமையும்.
ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனம் (ASPI), கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு மதிப்பீட்டில், இத்தகைய இராணுவ நடவடிக்கையை 1915-ஆம் ஆண்டின் காலிபோலி தாக்குதலுடன் (Gallipoli) ஒப்பிட்டுள்ளது. இது ஒட்டோமான் மண்ணில், தனது துருப்புக்களை இறக்கி டார்டனெல்லஸைக் கைப்பற்ற பிரிட்டன் மேற்கொண்ட பேரழிவுகரமான முயற்சியாகும். காலிபோலியில், பிரிட்டனின் கடற்படையால் நீரிணையை விடுவிக்க முடியவில்லை, எனவே கடற்படையால் செய்ய முடியாததைச் செய்ய இராணுவம் அனுப்பப்பட்டது. இதன் விளைவு எட்டு மாத காலக் கொலைக்களம்; இரு தரப்பிலும் கால் மில்லியன் (2,50,000) உயிரிழப்புகள் ஏற்பட்டன. இறுதியில் பெருமளவிலான மரணங்களைத் தவிர எதையும் சாதிக்காமல் நட்பு நாடுகள் முற்றிலுமாகப் பின்வாங்கின. தங்கள் சொந்த மண்ணில் போரிட்ட தற்காப்புப் படையினரை அங்கிருந்து அகற்றுவது சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையில் இத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த அந்த நிறுவனத்தின் மதிப்பீடு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது “காலிபோலியை விட பத்து மடங்கு மோசமானதாக” இருக்கும் என்று அது கூறுகிறது. “ஈரானியர்கள் எப்போதும் தற்காப்பிற்காக நாட்டின் உட்பகுதிகளுக்குப் பின்வாங்க முடியும்” என்பதே இதற்குக் காரணம். நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரானின் கடற்கரைப் பகுதி 150 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது—இது காலிபோலி தீபகற்பத்தின் நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். மேலும், அதன் பின்னணியில் உள்ள மலைகள் ஆழமான தற்காப்பு நிலைகளை வழங்குகின்றன. “அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாகக் கைப்பற்றக்கூடிய எந்தவொரு தற்காப்புக் கோடும் அங்கு இல்லை,” என்று ASPI எழுதியுள்ளது.
ஈரான் இந்தப் போருக்காக 40 ஆண்டுகளாகத் தயாராகி வந்திருக்கிறது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் ஏவுதளங்கள், கண்ணிவெடி அமைக்கும் வசதிகள் மற்றும் அதன் கடற்கரைப் பாதுகாப்பின் முதுகெலும்பாக விளங்கும் நூற்றுக்கணக்கான அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கான இடங்களைக் கொண்டு கடற்கரைப் பகுதியை பலப்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் 5,000ம் கடற்படை வீரர்கள் உட்பட 20,000ம் படையினர்களை ஈரான் நிலைநிறுத்தியுள்ளது. ஒரு கடல்வழி தரை இறக்கத்தை எவ்வாறு முறியடிப்பது என்பதற்கான ஒத்திகைகளையும் அது குறிப்பாக நடத்தியுள்ளது. ஈரானிய கடற்படை நடவடிக்கைகளின் மையமான, ஐந்து லட்சம் மக்கள் வாழும் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரம் நேரடியாக இந்த நீரிணையின் ஓரத்தில் அமைந்துள்ளது.
அமெரிக்கா இந்தக் கடற்கரைப் பகுதியில் கடல்வழியாக தரைவழித் தாக்குதலை நடத்தினால், அது நீருக்கு அடியில் கண்ணிவெடிகள், நீரில் படகுத் தாக்குதல்கள் மற்றும் கரையில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தரை இறக்கத்தில் உயிர் பிழைக்கும் படையினர்கள், அதன் பிறகு முடிவில்லாத ஒரு தரைவழிப் போரைச் சந்திக்க நேரிடும்—அதாவது கண்ணிவெடிகள், கெரில்லாத் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டின் ஆழமான பகுதிகளில் இருந்து ஏவப்படும் பீரங்கித் தாக்குதல்கள். ஒவ்வொரு மலை முகடு, ஒவ்வொரு சாலை மற்றும் ஒவ்வொரு சுரங்கப்பாதையையும் நன்கு அறிந்த, 9 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிலிருந்து தொடர்ந்து படையினர்களைப் பெற்று வலுவூட்டக்கூடிய ஒரு படைக்கு எதிராக இந்தப் போர் அமையும்.
இந்தக் கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றி வைத்திருக்க பல்லாயிரக்கணக்கான அல்லது ஒருவேளை பல இலட்சக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் தேவைப்படும். ஆரம்பக்கட்டத் தாக்குதல், தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் ஒவ்வொரு “வரையறுக்கப்பட்ட” இலக்கும் போதுமானதாக இல்லாதபோது தவிர்க்க முடியாமல் விரிவடையும் இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கம் என அனைத்திலும் ஏற்படும் உயிரிழப்புகள் பேரழிவை உண்டாக்கும். இவை இதுவரை கொல்லப்பட்ட டசின் கணக்கான எண்ணிக்கையில் இருக்காது; மாறாக நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இருக்கும்—வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க மக்கள் பார்த்திராத அளவிலான பெரும் உயிர்ச் சேதமாக இது அமையும்.
இவை அமெரிக்கத் தரப்பில் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டுமே. வான்வழித் தாக்குதல்களால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் மினாப் நகரில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட ஒற்றைத் தாக்குதலில் பொசுக்கப்பட்ட குறைந்தபட்சம் 175 குழந்தைகளும் அடங்குவர். ஒரு தரைவழிப் போரில் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். எதை எதிர்பார்க்கலாம் என்பதை ஹெக்செத் நமக்கு ஏற்கனவே கூறியுள்ளார்: அது, “இரக்கமில்லை” மற்றும் “இடம் கொடுக்கப்படாது”. “வானத்திலிருந்து நாள் முழுவதும் மரணமும் அழிவும் வரும்” என்பதாகும்.
பரந்த அளவிலான பேரழிவு
ஒரு தரைவழிப் படையெடுப்பு முழு மத்திய கிழக்கையும் தீக்கிரையாக்கி, ஒரு உலகளாவிய மோதலாக உருவெடுக்கும். இஸ்ரேல் ஏற்கனவே காஸாவில் நடத்தி வரும் இனப்படுகொலையை லெபனான் மீதான குண்டுவீச்சாக விரிவுபடுத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ஹோர்முஸ் நீரிணையில் ரோந்துப் பணிக்காக ஏற்கனவே தமது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன.
ஈரான் ஏற்கனவே எட்டு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிய மண்ணில் தரைப்படை இறங்குவது, அமெரிக்கத் தளங்கள் மீதான தீவிர ஏவுகணைத் தாக்குதல்கள், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவின் விரிவான தாக்குதல்கள், செங்கடல் கப்பல் போக்குவரத்து மீது ஹவுதிகளின் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதான நேரடித் தாக்குதல்களைத் தூண்டும். இது எண்ணெய் விலையை ஒரு பேரலுக்கு 150 அல்லது 200 டாலராக உயர்த்தி, உலகைப் பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளும்.
இவை அனைத்திற்கும் பின்னால், எல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது. ஈரானுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதை ட்ரம்ப் நிர்வாகம் நிராகரிக்க மறுத்துவிட்டது. ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட இலக்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட B61-11 போன்ற நிலத்தை ஊடுருவும் குண்டுகள் அல்லது “தந்திரோபாய” அணுஆயுதங்கள், ஹிரோஷிமாவை அழித்த குண்டை விட பல மடங்கு அதிக வீரியம் கொண்டவை.
“இரக்கமின்றி” போரை நடத்தும் ஒரு ஜனாதிபதி, கொல்லுவதற்கு “அதிகபட்ச அதிகாரங்களை” வழங்குவதாகப் பெருமை பீற்றிக்கொள்ளும் ஒரு யுத்த அமைச்சர், சர்வதேச சட்டம் மற்றும் ஜனநாயக ஆட்சியின் ஒவ்வொரு நெறியையும் தகர்த்தெறிந்த இவர்கள் — 1945 முதல் நடைமுறையில் உள்ள அணு ஆயுதத் தடையை மதிப்பார்கள் என்று கருத முடியாது.
அணுஆயுதப் பயன்பாடு, ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், ஈரானியர்களின் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உயிர்களை மதிப்பற்றதாகவும், சட்டத்தின் கட்டுப்பாடுகளை இழிவாகவும் கருதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கைகளில், அது இப்போது ஒரு உண்மையான சாத்தியமாக மாறியுள்ளது.
போரை நிறுத்து — தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தைக் கட்டியெழுப்பு
ஜனநாயகக் கட்சி இந்தக் குற்றத்தைத் தடுத்து நிறுத்தாது. மாறாக, அது இந்தப் போருக்கான நிதியை வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் தனது இராணுவத் தளவாடங்களை அதிவேகமாக அனுப்பி வந்த வேளையில், 21 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 1.2 டிரில்லியன் டாலர் அரசுச் செலவின மசோதாவை நிறைவேற்ற தீர்க்கமான ஆதரவை வழங்கினர். 217-க்கு 214 என்ற மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறிய இந்த மசோதா, 2026 செப்டம்பர் வரை இராணுவத்திற்குத் தேவையான நிதியை உறுதி செய்தது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள், தங்களது ஆட்சேபனைகளை வெறும் நடைமுறை மற்றும் நெறிமுறை சார்ந்த கேள்விகளோடு நிறுத்திக்கொண்டனர். இது போரின் மூலோபாய நோக்கங்களை ஏற்றுக்கொண்ட, அதேசமயம் அதன் தோல்விகளால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு அஞ்சுகின்ற அரசியல்வாதிகளின் நாகரீகமான புகார்கள் மட்டுமே. Drop Site News அறிக்கையின்படி, கணிசமான எண்ணிக்கையிலான செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர், ஈரான் “இறுதியில் இராணுவ ரீதியாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று” என்று நம்பினர் — “அதற்கு ட்ரம்ப் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் துல்லியமான விருப்பமாக இருந்தது.”
இதில் உடந்தையாக இருக்கும் முதலாளித்துவ அரசியலின் நிறுவனங்களால் இந்தப் போரை நிறுத்த முடியாது. ஏனெனில் அவை இந்தச் சதியில் கூட்டாளிகளாக உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பால் மட்டுமே இதை நிறுத்த முடியும்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்த எச்சரிக்கையையும், அழைப்பையும் விடுக்கின்றன: ஒரு பயங்கரமான குற்றம் தயாராகி வருகிறது. ஈரான் மீதான படையெடுப்பு ஒரு தலைமுறை கண்டிராத அளவிலான இரத்தக் களரியை உருவாக்கும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்தப் போரின் பொருளாதார விளைவுகள் — வானளாவ எகிறும் எரிவாயு விலைகள், உயர்ந்து வரும் உணவுச் செலவுகள், சமூகத் தேவைகளிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர் இராணுவ இயந்திரத்திற்குத் திருப்பிவிடப்படுவது என— நேரடியாக உழைக்கும் மக்களின் முதுகில் விழுகின்றன. ஈரானியக் கடற்கரைகளில் மடிவதற்காக அனுப்பப்படும் படையினர்கள் தொழிலாள வர்க்கத்தின் மகன்களும் மகள்களும் ஆவர். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான ஈரானில், தங்கள் நாட்டைப் பாதுகாக்கும்போது கொல்லப்படுபவர்கள், அமெரிக்கத் தொழிலாளர்களின் வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர்.
வெளிநாடுகளில் நடக்கும் இந்தக் குற்றவியல் போருக்கும், உள்நாட்டில் நிலவும் சமூக நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பு வெறும் கற்பனையானது அல்ல. ஈரான் மீதான தாக்குதலுக்கு முந்தைய மாதங்களிலும் வாரங்களிலும், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நகரங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அதிகாரிகளைக் குவித்து, அமெரிக்கக் குடிமக்களையே படுகொலை செய்தது.
ஈரானுக்கு எதிரான போரின் தீவிரம், அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவதை அவசியமாக்கும். ஒட்டுமொத்த அமெரிக்க சமூகமும் போரின் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தப்படும். இதன் பொருள் சமூக நலத்திட்டங்கள் மீதான ஒரு பாரிய தாக்குதல் மற்றும் அரசியல் எதிர்ப்புகளைக் குற்றமாக்குவது என்பதாகும்.
ஈரான் மீதான போருக்கு எதிராக மக்களிடையே ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. இந்த எதிர்ப்பு முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்டு அரசியல் ரீதியாக வழிநடத்தப்பட வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை, உங்களின் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் போருக்கு எதிராக அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறது. வெட்கக்கேடான மௌனத்தை கடைப்பிடித்து வரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாகச் செயல்படும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்குங்கள்.
போருக்கு எதிரான போராட்டத்தை, கண்ணியமான ஊதியம், சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் கல்விக்கான போராட்டத்துடன் ஒன்றிணையுங்கள்—இவை அனைத்தும் ஏகாதிபத்தியப் போரின் பலிபீடத்தில் தியாகம் செய்யப்படும் சமூக உரிமைகளாகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு கட்சிகளையுமே (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்) நிராகரியுங்கள். இவை மக்கள் நலனுக்காக அல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகவே சேவை செய்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.
போருக்கு எதிரான போராட்டம் என்பது அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டமாகும். சோசலிசம் என்பது ஒரு கற்பனாவாத இலட்சியம் அல்ல. அது மனிதகுலத்தின் உயிர் வாழ்வுக்கு அவசியமானதாகும்.
